இந்திய பாதுகாப்புத் துறையை வலிமைப்படுத்தும் ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிற்பகலில் ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்தை வந்தடைகின்றன. இதனையடுத்து அம்பாலாவில் 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது ரஃபேல் போர் விமானங்கள் விவகாரம். நாட்டையே உலுக்கிய சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க 2106-ல் ரூ58,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து பெற இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
முதலாவது ரஃபேல் போர் விமானத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி பிரான்ஸ் சென்ற் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக முறைப்படி பெற்றார். இந்த நிலையில் ஐந்து ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. சுமார் 7,000 கி.மீ தொலைவு இந்த விமானங்கள் பயணிக்கின்றன.
இந்த ரஃபேல் போர் விமானங்களுக்கு உதவியாக எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்டவற்றுக்காக பிரான்ஸ் விமானங்களும் உடன் வருகின்றன. நடுவானில் 30,000 அடி உயரத்தில் ரஃபேல் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்பிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன. அம்பாலாவில் 144 தடை உத்தரவு
ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிற்பகல் ஹரியானாவின் அம்பாலா விமானப் படை தளத்தை வந்தடைகின்றன. அங்கு விமானப் படை தளபதி பதாரியா, முறைப்படி இந்த விமானங்களை வரவேற்று விமானப் படைக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அம்பாலாவில் 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.விளக்கு ஏற்ற பாஜக அழைப்பு
ரஃபேல் போர் விமானங்களை வீடியோ, படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஃபேல் போர் விமானங்களை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் வீதிகளில் ஆராவாரங்களை எழுப்ப வேண்டும் என்று பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அம்பாலா எம்.எல்.ஏ, அனில் விஜ், இரவு 7 மணி முதல் இரவு 7.30 மணிவரை விளக்கேற்றி ரஃபேல் போர்விமானங்களை வரவேற்கவும் அழைப்பு விடுத்திருக்கிறார்.