நான்காவது நாளாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 11 பேர் உயிரிழந்துள்ளனர்.


 


மாநில சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25872ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதிசெய்யப்பட்டுள்ள 1286 பேரில் 1012 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆகவே சென்னையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 17598ஆக உயர்ந்துள்ளது.


 


நான்காவது நாளாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையில் முதல் முறையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


செங்கல்பட்டில் 61 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கும் தூத்துக்குடியில் 17 பேருக்கும் திருவள்ளூரில் 58 பேருக்கும் திருவண்ணாமலையில் 16 பேருக்கும் நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 55 பேருக்கு இந்நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.


 


கடந்த 24 மணி நேரத்தில் 610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,316ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள் குணமடைந்தவர்கள் தவிர, தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 11,345 பேர் உள்ளனர்.


 


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14,101 சோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 5,28,534ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 208ஆக உயர்ந்திருக்கிறது.