காவல் நிலையத்திற்கு வருபவர்களை தாக்குவதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு. சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் விஸ்வநாதன், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை-மகன் வன்முறைக்கு ஆளாகி சிறையில் இறந்தது குறித்த குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அவர் '' காவல் நிலையத்திற்கு வருபவர்களை தாக்குவதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு.


யாருடைய மனதையும் புன்படுத்துவது போல் பேசக்கூடாது என காவல்துறையினருக்கு கூறியுள்ளோம். காவல்நிலையத்திற்கு வருபவர்களை தவறான முறையில் கையாளக் கூடாது என அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். கைதாகி காவல்நிலையத்திற்கு கொண்டுவருபவர்களை எப்படி நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் அளித்துள்ளது. அதனை பின்பற்றவேண்டும்,'' என்று அவர் தெரிவித்தார்


 


மேலும், காவலர்கள் யாருக்கும் உடல்நிலை சிறிது சரியில்லை என்றாலும் அவர்கள் பணிக்கு வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளதாகவும், அவர்களை வீட்டிலேயே ஒய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தாலும் அவர்கள் பூரண குணமடைந்த பின்பு தான் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.