மண்டலங்களுக்கு இடையே இன்று முதல் 30ம் தேதி வரை வாகன போக்குவரத்துக்கு தடை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் அவசியம் என்று கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, மண்டலங்களுக்கு இடையே இன்று முதல் 30ம் தேதி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள் மட்டும் பஸ்கள் இயங்கலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் அவசியம் என்று கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் கடந்த 92 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தமிழகம் முழுவதும் தற்போது வரை 67,468 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 1654 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 2865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.


 


இதற்கிடையே, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதை பின்பற்றி தற்போது மதுரை, தேனி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பல மாவட்டங்களில் கடைகளை திறக்கும் நேரங்களை குறைத்து அறிவித்துள்ளனர். சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், மற்ற மாவட்டங்களில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மதுரை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி உட்பட 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினமும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



இதற்கு, சென்னை மற்றும் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்தான் காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னையை போல் மற்ற மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


 


கூட்டம் தொடங்கியதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதைதொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எந்த நிலையில் உள்ளது, அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், இனி எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசினர். பெரும்பாலான மாவட்ட கலெக்டர்கள், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து தங்கள் மாவட்டங்களுக்கு வருபவர்கள் மூலமே கொரோனா தொற்று அதிகளவில் பரவுவதாக குற்றம் சாட்டினார். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதேபோன்று, நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்னும் அதிகரிக்க வேண்டும்,


 


தேவைப்பட்டால் தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மாவட்ட கலெக்டர்கள் சார்பில் வைக்கப்பட்டது. அதேநேரம், நாடு முழுவதும் வருகிற 30ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைகிறது. மேலும் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு விரும்பவில்லை. தேவைப்பட்டால் மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ளன. இதன்பிறகும், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டுமா, சென்னையில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டுமா அல்லது இதோடு முடித்துக்கொள்ளலாமா என்பது குறித்தும் கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.


 


இந்த கூட்டத்துக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழக அரசும் தமிழகம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. சில தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி அதிகாலை முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.


 


இந்நிலையில், மதுரை மாவட்டத்துக்கும் 24ம் தேதி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் வழங்கியதுபோல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா ரூ.1,000 வழங்கவும் அதை செயல்படுத்தும் விதமாக, வரும் 27.6.2020 முதல் சம்பந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.


 ஆய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்கள், தற்போது வாகனப் போக்குவரத்துக்கு மண்டல முறை அமலில் உள்ளதால், மண்டலங்களின் பிற மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும்,


 


மக்களின் பயணங்களை இதனால் தடுக்க இயலவில்லை என்றும், எனவே, வாகன போக்குவரத்தில் மண்டல முறைக்கு பதில், இ-பாஸ் இல்லாமல், மாவட்டத்திற்குள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், வேறு மாவட்டங்களுக்கு செல்லவோ, பிற மாவட்டங்களிலிருந்து வரவோ இ-பாஸ் பெற்றே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இந்த கருத்து ஏற்கப்பட்டு, இன்று (25ம் தேதி) முதல் 30ம் தேதி வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட காலத்தில், பொதுப் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும்.


 


கொரோனா நோய் பரவலை தடுக்க, பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பை வழங்கி நோய் பரவலை தடுக்க அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது தமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்த மண்டலங்களுக்குள் பொது போக்குவரத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாநகர காவல் எல்லை ஒரு மண்டலமாகவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒரு மண்டலம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஒரு மண்டலம் என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.