சென்னை: கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்து வருவதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
இந்தியாவில் கொரோன மிகவும் அதிகம் பாதித்து கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் 10-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக போராட்ட அறிவிப்பையும் கூட வெளியிட்டன. இருப்பினும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் நிதானமாகவே பல்வேறு சாதக பாதக அம்சங்களை அலசி ஆராய்ந்தது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார்
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்தது. இதனை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாகவும் தமிழக அரசுபரிசீலித்து வந்தது. இதனையடுத்து இன்று தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகத்தான அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
எடப்பாடியாரின் அதிரடி அறிவிப்பு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் 11-ம் வகுப்புக்கும் விடுபட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார். 12-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்துக்கான தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றதாகவும் காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80%; வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20% மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.