வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தனக்கு கொரோனா தொற்று இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறிவிட்டார்.. முதல்வர் பழனிசாமி.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்... அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

 



கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சைக்காக சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 350 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்து ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு மக்களும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.


மேலும், பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகளவில் உள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 45 அரசு மற்றும் 38 தனியார் மையங்கள் என மொத்தம் 83 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் மருத்துமனைகளில் 5,000 படுக்கைகள், கல்லூரிகள், பள்ளிகளில் 12,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.


 


பொதுமக்கள் எப்போது வீட்டை விட்டு வெளியே சென்றாலும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனாவுக்க மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் கூட, மருத்துவர்களின் சிகிச்சையால் 54% பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர்கள், ஆட்சியர்களுடன் பல முறை ஆலோசனை நடத்தப்பட்டது. தனக்கு கொரோனா தொற்று இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறிவிட்டார் என்றும் தெரிவித்தாா்



.ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்ற மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நாடு  முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி புதிய ரேசன் கார்டுகளை மக்களுக்கு வழங்க  வலியுறுத்தியுள்ளது. முதல் கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் ஆறு மாநிலங்களில் தற்போது அமல்படுத்தியுள்ளது. வரும் 2020ம் ஆண்டு ஜூன் 1ம் தேதியிலிருந்து நாடு முழுமைக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு  செய்தது.


 


இதற்கிடையே, தமிழகத்தில் பரிட்சார்த்த முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த 1.1.2020 முதல் 29.2.2020 வரை அமல்படுத்தப்பட்டது. இந்த 2 மாவட்டங்களில் மொத்தம் 9 லட்சம்  ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள், அந்த மாவட்டங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் 9 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களில் 9 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து வாழ்பவர்கள் பயன் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே, இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


 


ஆனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இத்திட்டம் செயல்படுத்துவது தள்ளி சென்றுகொண்டே இருக்கிறது. இந்நிலையில், திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ், அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில்  இந்த ஆண்டு தூர்வார எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன என்றும் கூறினார்.