திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். தமிழ்நாட்டில் இருந்த 72 பாளையங்களில் சிங்கம்பட்டியும் ஒன்று. இங்கு 29.09.1931ல் திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜாவுக்கு மகனாக பிறந்தார் 'தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி' என்ற டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி.
சுதந்திர இந்தியாவில் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. ஆனால், அதற்கு முன்பே தமது தந்தை சிவசுப்ரமணிய தீர்த்தபதி இறந்துவிட்டதால் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ஜமீன்தார் ஆக்கப்பட்டார். அப்போது அவர் மைனர் என்பதால் சிங்கம்பட்டி பாளையத்தைத் தனது பராமரிப்பில் எடுத்துக் கொண்டது பிரிட்டீஷ் அரசு.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையில் இருந்து உருவாகிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்றில் தாமிரபரணி தீர்த்தம், வேததீர்த்தம், கல்யாண தீர்த்தம், பாண தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இருப்பதாலும், சிங்கம்பட்டி ஜமீனுக்கு உட்பட்ட பகுதியாக இருந்த பொதிகை மலை இருந்ததாலும் தீர்த்தங்களுக்கு அதிபதி என்ற பொருளில் இந்த ஜமீன்தார்களுக்கு தீர்த்தபதி என்ற பட்டம் பெயரோடு சேர்ந்தது.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காகப் பயிற்சி பயிற்சி முகாம்கள் அமைக்க முயன்ற காலத்தில் இடம் தந்து உதவ முன்வந்தவர் மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தார். நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.
ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.
தமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி