ஏப்.14-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு அதன் பின்னரும் நீட்டிக்கப்பட்டது. அவ்வாறு நீட்டிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கழு பரிந்துரைத்தது. மத்திய அரசும் மே 3 வரை ஊரடங்கை நீட்டித்தது. இந்நிலையில் திடீரென ஏப் 20-க்குப் பிறகு சில தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் எனப் பலரும் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவ நிபுணர்குழு இம்முறையும் பரிந்துரையை அளித்துள்ளது. இதுதவிர இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. 22-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக உள்ள நிலையில் ஊரடங்கு தளர்வு குறித்த அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும், அனைத்துத் துறைச் செயலர்கள், தலைமைச் செயலர், காவல் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்டதில் ஏப் 20க்கு மேல் எந்த மாவட்டத்திலும், எந்தத் துறையிலும் ஊரங்கு தளர்வுகள் இல்லை. அதே நிலை தொடரும். மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு,“ஏப்.15 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்வது குறித்து ஆராய, 16.4.2020 அன்று ஒரு வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து ஆணையிட்டு இருந்தது. அக்குழு, முதல் கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதல்வரிடம் இன்று (20.4.2020) சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் ஆலோசனைகள் கவனமாக ஆராயப்பட்டன.
அதன் அடிப்படையில், நோய்த் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005ன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020 ஆம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்துள்ளது.
அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கெனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையைப் பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை திங்கட்கிழமை மாலை வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 43 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 46 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1520 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 457 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நோயால் இன்று இருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், மொத்த உயிரிழப்பு 17ஐத் தொட்டுள்ளது. தற்போது 1043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 6 பேர் சற்று கடுமையான உடல்நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே சென்னை நகரில்தான் இந்நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 303 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து வாரணாசிக்கு புனித யாத்திரை செய்தவர்கள், அங்கிருந்து சிறப்புப் பேருந்து மூலம் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அப்படி வந்த 127 பேரில் 2 பேருக்கு அந்நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களைத் தெரிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கிய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் ஒரு கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியிருக்கும் நிலையில், ஆந்திரப் பிரதேசம் 700 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகவும் ஆனால், அங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் டெஸ்ட் கிட் வந்ததற்காக முதல்வரைப் பாராட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார். மத்திய அரசு சொன்ன விலைக்கு, மத்திய அரசு குறிப்பிட்ட நிறுவனத்திலேயே ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கியிருப்பதாகத் தெரிவித்தார்