தமிழகத்தில் இன்று புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் 1072 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256ஆக அதிகரித்துள்ளது.


கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 12 நபர்கள் இறந்துள்ளனர் என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 220ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இன்று இறந்த 12 நபர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுத்திணறல் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இன்று பாதிப்புக்கு உள்ளான 1,373 நபர்களில் 11 நபர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், தெலுங்கானா, குவைத், மகாராஷ்டிரா, கேரளா,உள்ளிட்ட இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 1072 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் செயல்படும் 74 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 5, 44,918மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 16,447 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 585 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,914ஆக உயர்ந்துள்ளது.