ஒரே நாளில் இந்தியாவில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்த நோயை சமாளிப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கு ஓர் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
முதலில் டெல்லியில் கொரோனா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட பயணியின் ஆக்ரா உறவினர்கள் 6 பேருக்கும் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்கிறது பிஐபி அறிக்கை. ஆக திங்கள்கிழமை மட்டும் இந்தியாவில் புதிதாக 22 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நோய் உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையையும் சேர்த்தால் இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 28.
சீனாவை மட்டும் ஆட்டிப் படைத்து வந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் 78 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனா, தென் கொரியா, இரான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ஒப்பீட்டளவில் இந்தியா பெரிய பிரச்சனை இல்லாமல் இதுவரை தப்பித்துவந்தது குறிப்பிடதக்கது.
முதலில் கேரளாவில் மட்டுமே மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர். சில நாள்களுக்கு முன்புவரை இந்தியாவில் யாருக்குமே கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், திங்கள் கிழமை டெல்லியில் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் என இந்தியாவில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதில் டெல்லி நபர் இத்தாலிக்கும், தெலங்கானா நபர் துபாய்க்கும் பயணம் செய்து வந்திருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இத்தாலி பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்றுவரை இந்த மூவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஹோலி கொண்டாட்டம் இல்லை: மோதி அறிவிப்பு
"கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, மக்கள் கும்பலாக கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று உலகம் முழுவதும் வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டம் எதிலும் பங்கேற்பதில்லை என்று நான் முடிவு செய்துள்ளேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்
குடியரசுத் தலைவர் மாளிகையிலும் ஹோலி கொண்டாட்டம் இருக்காது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3000. அதிகம் பாதிக்கப்பட்ட நாடு சீனா என்றே கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்திய அரசாங்கம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.