இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அல்லது அதனால் உயிரிழப்பு ஏற்பட்ட 75 மாவட்டங்களை மூடி சீல் வைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன
இதனால், வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மூடி சீல் வைக்கப்படலாம் என்று தெரிகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து இந்த மாவட்டங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும். இந்த 3 மாவட்ட எல்லைகளும் மூடி சீல் வைக்கப்படும்.
இந்தப் பட்டியலில் புதுச்சேரியின் மாஹேவும் இடம்பெற்றிருக்கிறது
கர்நாடகாவைப் பொறுத்தவரை இதுவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி கர்நாடகாவில் பெங்களூரு, தார்வாத், கூர்க், சிக்பல்லபுரா, கல்புர்கி மற்றும் மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில் திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், பத்தினம்திட்டா, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் சீல் வைக்கப்படும். பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் கலந்துகொண்ட உயரதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு இன்று காலை எடுக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் வரும் 31ம் தேதி வரை ரயில் சேவைகளை நிறுத்தவும் இந்தக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்பட்டது.