தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், பிரதமர் மோடியின் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டிருந்த நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவர், நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்த ஒருவர் என நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது