தமிழகத்தில் கொரோனாவுக்கு முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்தார்.

கொரோனா தொற்று நோயின் தீவிர தாக்குதலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக இந்தியாவும் முடக்கப்படுகிறது. இது நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்தது.



சீனா, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் போல இந்தியாவிலும் கொரோனா வெகுவேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் தாக்கம் ஒவ்வொருநாளும் அதி தீவிரமாகி வருகிறது.


நாடு முழுவதும் கொரோனாவால் 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்தார்.


மதுரையில் இந்த நபர் அனுமதிக்கப்பட்டபோதே, கவனிக்கப்பட்ட நபராக அறியப்பட்டார். காரணம், இந்த நபர் எந்த வெளிநாட்டுக்கும், வெளிமாநிலத்துக்கும் செல்லவில்லை. தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா பாதித்த முதல் நபர் இவர்தான்


கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் நள்ளிரவு 2 மணி அளவில் வெளியிட்ட செய்தியில், ''நீண்ட காலமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எங்களின் கடும் போராட்டம் மற்றும் சிறந்த சிகிச்சையையும் மீறி அவர் சில நிமிடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்'' என்று குறிப்பிட்டிருந்தார்.


வைரஸ் தொற்று பாதிப்பை அறிந்துள்ளதால் தொடர்ந்து எனது பத்திரிகையாளர் சந்திப்புகளில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் அவர்களுக்கு அது அதிக ஆபத்தை உண்டாக்கும் என்பதை நான் தெளிவாக கூறிவருகிறேன். உங்கள் குடும்பத்தில் யாரவது ஒருவருக்கு இது போன்ற பாதிப்புகள் இருந்தால் நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்திருந்தார்


தற்போது உலகை கடும் அச்சத்தில் ஆழ்த்திவரும் கொரோனா  வைரஸ்.  சீனாவில் உருவான கொரோனா  வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தா‌க உயிரி‌ழந்து வருகின்றனர்.


நேற்று உயிரிழப்பு 16 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 18,810 பேர் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்துள்ளனர்


197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 21, 413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். ஸ்பெயினில் புதிதாக 680 பேர் இறந்ததால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,991ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு புதிதாக 743 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820 ஆக அதிகரித்துள்ளது.