கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, உலகளவில் 9,000ஐ கடந்துள்ளது. சீனாவில் இதுவரை 3,248 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தாலியில் உயிரிழப்பு 3,405ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 195 பேரில் 163 இந்தியர்கள், 32 வெளிநாட்டவர்கள் ஆவர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 28 பேர், உத்தரப் பிரதேசத்தில் 19 பேர், ஹரியானாவில் 17 பேர், கர்நாடகாவில் 15 பேர், டெல்லியில் 17 பேர், ஜம்மு - காஷ்மீரில் 4 பேர், லடாக்கில் 10 பேர்,தெலங்கானாவில் 16 பேர், பஞ்சாப்பில் 2 பேர், ராஜஸ்தானில் 7 பேர், தமிழ்நாட்டில் 3 பேர்,ஆந்திராவில் 2 பேர்,குஜராத்தில் 2 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



சட்டிஸ்கர், ஒடிசா, சண்டிகர், உத்தரகண்ட், புதுச்சேரி,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. இதனிடையே டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப்  ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெல்லியில் 3 பேர், கேரளாவில் 3 பேர், ராஜஸ்தானில் 3 பேர், உத்தரப்பிரதேசத்தில் 9 பேர், தமிழகத்தில் ஒருவர், தெலங்கானாவில் ஒருவர் என மொத்தம் 20 பேர் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், இந்தியாவிற்கு வந்த இத்தாலியை சேர்ந்த 69 வயதான சுற்றுலா பயணிக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.