உலகில் 3,35,997 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 98,333 பேர் குணமடைந்துவிட்டனர். 14,641 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

        


இதுவரை உலகில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற தகவல்களைப் பொறுத்தவரை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளிக்கும் புள்ளிவிவரப்படி இந்திய நேரப்படி நேற்று காலை 7:13 வரை உலகில் 3,35,997 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 98,333 பேர் குணமடைந்துவிட்டனர். 14,641 பேர் இதுவரை இறந்துள்ளனர்.சீனாவில் தொற்று தொடங்கியது முதல் இதுவரையிலான புள்ளிவிவரம் இது.


இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் நேற்றுமுன்தினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியதாவது:-
நாடு முழுவதும் நேற்று காலை 10 மணி வரை 13,383 பேரின் ரத்தமாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் மராட்டியத்தில் 3 வெளிநாட்டினர் உள்பட 67 பேருக்கும், கேரளாவில் 7 வெளிநாட்டினர் உள்பட 67 பேருக்கும், டெல்லியில் ஒரு வெளிநாட்டுக்காரர் உள்பட 29 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 28, ராஜஸ்தானில் 27, தெலுங்கானாவில் 26 (11 வெளிநாட்டினர்), கர்நாடகாவில் 26 பேருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது.
இதுதவிர தமிழ்நாடு, அரியானா, பஞ்சாப், குஜராத், மேற்குவங்காளம், ஆந்திரா, உத்தரகாண்ட் உள்பட நாடு முழுவதும் பரவலாக புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியானவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 41 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இதில் 24 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 7 பேர் பலியாகி உள்ளனர்.
இவ்வாறு மருத்துவ கவுன்சில் கூறியிருந்தது.
இதற்கிடையே மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் 57 வயதுள்ள ஒருவரும், இமாச்சலபிரதேசத்தில் ஒருவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
இதேபோல மேலும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று இரவில் 471 ஆக அதிகரித்தது.
இதுவரை பார்த்திராத இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்துள்ளன.
டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட், நாகலாந்து, கேரளா உள்பட 20 மாநிலங்களில் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மராட்டியம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்பட பல மாநிலங்கள் ஏற்கனவே மாநிலத்தின் ஒரு பகுதிக்கு தடை விதித்துள்ளது. பீகார், அரியானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பல மாவட்டங்களுக்கு இதுபோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்களில் முழுமையான தடையும், 6 மாநிலங்களில் பகுதியளவு தடையும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா மாநில தலைமை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “சூழ்நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசு டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த பரிந்துரைத்துள்ளது. இந்த 80 மாவட்டங்களிலும் வசிப்பவர்கள் பயணம் செய்யவும், நடமாடவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகள் ரெயில்கள், மாநிலங்களுக்கு இடையே செல்லும் பஸ் போக்குவரத்து ஆகியவை 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அறிவிக்கப்பட்ட இந்த பகுதிகளில் கடுமையான தடைகளை விதிக்கவும், இந்த உத்தரவுகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பத்திரிகை தகவல் துறை தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா குர்ஜி பகுதியில் உள்ள ஒரு மசூதியில் வெளிநாட்டினர் இருப்பதாக சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 10 பேரையும், அவர்களின் வழிகாட்டியாக செயல்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2 பேரையும் போலீசார் பிடித்து ரத்த பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
உரிய விசா வைத்துள்ள அவர்கள் 10 பேரும் மதபோதகர்கள் என தெரியவந்தது. 12 பேருக்கும் சோதனை செய்ததில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிந்ததும் விடுவிக்கப்பட்டனர். மற்ற 6 பேரின் முடிவு இன்னும் வரவில்லை. அதுவரை ஓட்டலில் தனிமையில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.


பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம் என எச்சரிக்கும் மகாதீர்நாம் அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் கவலை தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் போன்ற ஒன்றை இதுவரைக் கண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்."தற்போது மலேசியாவில் நடக்கக் கூடிய அனைத்தும் உலகின் இதர பகுதிகளிலும் நடக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்படலாம் அல்லது உற்பத்தி குறைக்கப்படலாம். ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப் படக்கூடும்."உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்படும். இதனால் பணக்கார நாடுகள் கூட சிரமங்களைச் சந்திக்கும். சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டமானது கடுமையாக இருக்கும். அன்றாடம் சம்பாதிக்கக் கூடியவர்கள் சிரமப்படுவார்கள். இவர்களால் சம்பாதிக்க முடியும் என்றாலும் தேவையை ஈடுகட்டும் வகையில் வருமானம் இருக்காது. எனவே அரசாங்கம் பொருளாதார ரீதியில் உதவவேண்டியிருக்கும்."மலேசியாவை பொருத்தவரை சுற்றுலாத்துறை தான் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய துறையாகும். இப்போது சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அதை சார்ந்துள்ளவர்கள் வேலையை, வருமானத்தை இழக்க நேரிடும். அரசாங்கத்துக்கும் வருமான இழப்பு ஏற்படும்.


"மொத்தத்தில் நாம் பயங்கரமான பேரழிவை எதிர்கொண்டுள்ளோம் என்பதே உண்மை," என்று அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்