கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
அன்று காலை காலை 7 முதல் இரவு 9 வரை இது அமலில் இருக்கும் என்றும் இதனை மக்கள் ஏற்று நடக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவம் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகை உலுக்கிவரும் கொரோனா தொற்று சிக்கல் இந்தியாவையும் கவலைக்குள்ளாக்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை - மார்ச் 19 - இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் இந்த 'மக்கள் ஊரடங்கு' பற்றி அறிவித்தார்.
இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளோர், போக்குவரத்து, உணவு, ஊடகம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் ஊரடங்கு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் கைத்தட்டியோ, தங்கள் வீட்டின் அழைப்பு மணிகளை அடித்தோ நன்றி தெரிவிக்கவேண்டும்.
ஐந்து மணிக்கு உள்ளாட்சி மன்றங்கள் சைரன் ஒலி எழுப்பவேண்டும். சாத்தியமானால் ஒவ்வொருவரும் 10-பேரை அழைத்து மக்கள் ஊரடங்கு பற்றி எடுத்துச் சொல்லவேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்