தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி.

தமிழகத்தில் ஒருவர் உட்பட இந்தியாவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இந்த நோய் தொற்றியவர்கள் எண்ணிக்கை 34 ஆகியுள்ளது.தமிழகத்தில் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் "சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தபோதும் அவரின் உடல்நிலை சீராக உள்ளது. பொது மக்கள் யாரும் அஞ்சவேண்டாம்" என தெரிவித்தார். 45 வயதான அந்த நபர் ஓமனில் இருந்து சென்னை வந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நபர் 'ஏசிம்ப்டமாட்டிக்' (Asymptomatic) நிலையில் இருக்கிறார் என தமிழக சுகாதார துறை அமைச்சர்  விஜயபாஸ்கர்    தெரிவித்துள்ளார்.


* ஏசிம்ப்டமாட்டிக்  நிலை என்றால் என்ன


பாதிக்கப்பட்ட நபரிடம் ஆரம்ப கட்டடத்தில் முழுமையான அறிகுறிகள் தென்படாது. ஆனால் நோய் தொற்று கிருமி அவரது உடலில் இருக்கும். பாதிக்கப்பட்டவரின் நோய் எதிர்ப்பு சக்தி அவரை ஒரு சில நாட்கள் வரை காப்பாற்றும். ஆனால் நோய் கிருமி அவரது உடலில் இருப்பதால், அவரால் பிறருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்கள் அவரோடு, தொடர்பில் இருந்தால், அவரது கைகள், சளி அல்லது எச்சில் படுவது போன்ற சூழலில் இருந்திருந்தால், மக்கள் நோயாளியாகும் வாய்ப்புள்ளது. 


கொரோனா பிரச்சனை தொடங்கிய பிறகு இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 1077 பேர். தமிழகம் முழுவதும் தத்தமது வீடுகளிலேயே வைத்து அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது.