. சீனாவில் ஒரே நாளில் கொரோனா வைரசால் 58 பேர் பலியான நிலையில், இதுவரை 362 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 10 நாளில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை தற்போது திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் மொத்தம் 362 பேர் பலியான நிலையில், 2,829 பேர் புதியதாக வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நோய் தொற்று பாதிப்பில், 17,205 சீனர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு தவித்து வருகிறது.
சீனா சென்று திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது கேரள அரசு.முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையின் பேரில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே ஷைலஜா மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்றார்.
கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் தென்படும் நோயாளிகளை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்து இருந்தார்.இந்நிலையில்தான் கேரளாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது