தனி விமானம்மூலம் டெல்லியில் இருந்து டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

"ஏர் போர்ஸ் ஒன்" என்ற தனி விமானம் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 24 தேதி மதியம் சுமார் 12 மணி அளவில் இந்தியா வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகை தந்த அதிபர் டிரம்பை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.அதன்பின்னர் டிரம்ப் அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக ஊர்வலமாக சென்று சபர்மதி ஆசிரமத்தை அடைந்தார். அங்கு மனைவி மெலானியாவுடன் தேசத்தந்தை காந்தி வாழ்ந்த இடங்களை சுற்றிப்பார்த்தார்


அதன்பின்னர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான 'மோதேரா மைதானத்தில்' பிரதமர் மோடியுடன் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினார். சுமார் 1.5லட்சம் பேர் அங்கு கூடியிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமர்மோடியை வெகுவாக புகழ்ந்து பேசினார்.


பின்னர் அகமதாபாத்தில் இருந்து தாஜ்மகாலை பார்ப்பதற்காக விமானத்தில் ஆக்ரா சென்றார். டிரம்புக்காக யமுனை ஆற்றில் இருந்து மாசு கலந்த நீர் வெளியேற்றப்பட்டு புதிய நீர் நிரப்பபி வைத்திருந்தது உத்தரப்பிரதேச அரசு. தனது மனைவி, மகள் மருமகனுன் குடும்பமாக காதல் சின்னத்தை ரசித்தார்


பின்னர் ஆக்ராவில் இருந்து டிரம்ப் டெல்லி வந்தார். அங்குள்ள ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் டிரம்ப் இரவு ஓய்வு எடுத்தார். அதன்பிறகு 25-ந் தேதி டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அதிபர் டிரம்ப் சந்தித்தார்.. ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்


பின்னர் டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் டிரம்ப் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டார். சுமார் 21000 கோடி ரூபாய்க்கு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது . பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.


பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் மத்திய அரசு இரவு விருந்து அளித்தது. அதில் டிரம்ப், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். விருந்து முடிந்த பின்னர், பிரதமர்மோடி டிரம்பை கட்டியணைத்து, கைகொடுத்து இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தார். அதன் பின்னர் தனி விமானம்மூலம் டெல்லியில் இருந்து டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.