இப்போராட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழகம் முழுவதும் 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என இஸ்லாமிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடியுடன் தமிழக டிஜிபி திரிபாதி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இப்போராட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழகம் முழுவதும் 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் பதிவேடு (என்பிஆர்), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்ஆர்சிக்கு) ஆகியவற்றிற்கு எதிராகவும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் சென்னை வண்ணாரப்பேட்டையில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கடந்த 14ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.
இதைதொடர்ந்து போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்ததாகவும், முதியவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், முஸ்லிம் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், கைது செய்யப்பட்ட 120 பேரையும் விடுவிப்பதற்கு கமிஷனர் சம்மதித்தார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 120 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.