முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு சந்தை சரிவிலிருந்து மீளுமா?

கடந்த சில நாள்களாகத் தலைநகர் டெல்லியில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்மீது நிகழ்த்தப்பட்ட கலவரத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மனதில் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.


வர்த்தக வாரத்தின் இறுதிநாளான 28.2.202 நேற்று இந்தியப் பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் அதாவது 3.6 சதவிகிதம் சரிந்து 38,297 என முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்ட்டி 431 புள்ளிகள் சரிந்து 11,201-ல் முடிவடைந்தது. இதன்காரணமாக,  ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


ஏற்கெனவே பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ள நிலையில் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு, முதலீட்டாளர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தை சரிவிலிருந்து மீளுமா என்பது வரும் திங்களன்று தொடங்கும் வர்த்தக நாளில்தான் தெரியவரும்


சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் வரை சரிந்திருப்பது இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய சரிவாகும். இதற்குமுன்னர், 2015 ஆகஸ்ட் 24-ம் தேதி மிகப்பெரிய அளவில் 1,624 புள்ளிகள் இறக்கத்தைச் சந்தித்திருந்தது. அப்போதும் சீனாவின் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இதற்குக் காரணமாக இருந்தது. தற்போதும் சீனாவின் கொரோனா வைரஸால் உலக அளவில் ஏற்பட்ட தாக்கமே இந்தியப் பங்குச்சந்தையைப் பெரிதும் பாதித்துள்ளதா? திங்களன்று தொடங்கும் வர்த்தக நாளில்தான் தெரியவரும்.