டெல்லியில் பயங்கர கலவரம் 13பேர் பலி "வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லியில் நாளை புதன்கிழமை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்.

இந்த வன்முறைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.


இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயமடைந்துள்ளனர். அதில் சுமார் 40% பேர் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


பள்ளிகள் மூடல்


இதனிடையே "வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லியில் நாளை புதன்கிழமை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். எல்லா மாநிலத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுகின்றன. நாளைய சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைக்கும்படி சிபிஎஸ்இ வாரியம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.


ஞாயிறன்று ஜாஃபராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவானவர்கள் பேரணியாக செல்லத் தொடங்கியதும் பதற்றம் உண்டானது.


ஊடங்கங்கள் மற்றும் சமூக ஊடங்களில் வெளியான காணொளிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான மற்றும் எதிரான போராட்டக்காரர்கள் கற்களை வீசிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதை பார்க்க முடிகிறது.


கோகுல்புரியில் டயர் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதால், அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் சிலர் கற்களை குவித்து வைத்து எறிவதை காண முடிகிறது என பிபிசி செய்தியாளர் ஃபைசல் கூறுகிறார். மேலும் பாலம் ஒன்றின் மேல் நின்று நடப்பதை கவனித்து கொண்டிருந்த சில செய்தியாளர்கள் மீது கல் எறியப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். இதற்கிடையில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்களும் கேட்டன.சிஏஏ ஆதரவாளர்கள் மீண்டும் மீண்டும் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது.


இந்நிலையில் தற்போது 2 மணி அளவில் பஜன்பூரா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.


தற்போது மீட் நகர் அருகில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் மூவர்ண கொடி ஏந்தியபடி வீதியில் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் முழக்கமிட்டு செல்கின்றனர். இந்த கூட்டத்தில் சில காவி நிற கொடிகளையும் காண முடிந்தது.