பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது மலேசிய கல்வித்துறை சார்பில் அந்நாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ..

பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பில் அந்நாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.


பொங்கல் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படுவது என்றும், அதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜனவரி 13ஆம் தேதியிட்ட இந்தச் சுற்றறிக்கை மலேசியக் கல்வி அமைச்சகத்தின் சார்பாக அனைத்து மாநில கல்வித்துறை இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இஸ்லாமிய வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பொங்கல் பண்டிகையானது ஒரு சமயப் பண்டிகை என்றும், அதில் இஸ்லாமியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், பொங்கல் பண்டிகையை பள்ளிகளில் கொண்டாட எந்தவிதத் தடையுமில்லை என மலேசிய கல்வி அமைச்சகம் புதன்கிழமை (ஜனவரி 15) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.கடந்த 13 ஜனவரி 2020 தேதியிட்ட கல்வி அமைச்சகத்தின் சுற்றறிக்கைக் கடிதம், இதுபோன்ற கொண்டாட்டங்களில் தங்களின் பிள்ளைகள் பங்கு பெறுவது தொடர்பில் இஸ்லாமியப் பெற்றோர்கள் கொண்டிருந்த கவலையைத் தணிக்கும் விதத்திலேயே அனுப்பப்பட்டது. அந்தக் கடிதம் ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் நிலைப்பாடு மற்றும் வழிகாட்டுதல்கள் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டது," என்றும் கல்வி அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.