திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு . விஜய் மல்லய்யா என்ற வங்கி மோசடி மன்னனை எப்படி வெளியேற விட்டீர்கள்'' என்று காங்கிரசைப் பார்த்துக் கேள்வி கேட்ட அன்றைய எதிர்க்கட்சி பா.ஜ.க. இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடத்துகிறது.வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி, நீரவ்மோடி, பா.ஜ.க. ஆட்சியில் எப்படி வெளிநாட்டிற்குத் தப்பினார் என்ற கேள் விக்கே விடை இன்னும் கிடைக்காத நிலையில், அடுத்து நித்தியானந்தா என்ற பெயரில் ஒரு காவி மோசடிப் பேர்வழி - கிரிமினல் குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு ஆளான கடைந்தெடுத்த நபர் எப்படித் தப்பினார் - வெளியேறினார்? அதுவும் வெளிநாட்டில் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர் எப்படிப் பணம் சேர்த்தார்?
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ப.சிதம் பரங்கள்மீது பாயும் சட்டங்கள் இந்த நித்தி யானந்தாக்களின் இத்தகைய சாலோப, சாமீப, சாரூப, சாயுச்சிய பக்தி ராஜ் ஜியத்தை எப்படி அனுமதிக்கின்றன?
மத்திய அரசின் உள்துறைக்கே அவர் போன்ற ஆசாமிகள் சவால் விடுகிறார் களே, அதற்குரிய கடும் எதிர்நடவடிக் கைகள்தான் என்ன?
தனி ஹிந்து நாடாம்; இவர் குடியுரிமை வழங்குகிறாராம்; வாருங்கள் என்ற அழைப்பு விடுத்து பகிரங்கமாக ஏடுகளுக் குப் பேட்டி தருகிறாராம். இவைகளை எப்படி மத்திய அரசு சகித்துக் கொண்டுள் ளது?
மோசடி மன்னர்களான சாமியார்களுக்கு தனிச் சிறைச்சாலை தேவை!
இத்தகைய கிரிமினல் மோசடி மன்னர் களான சாமியார்கள் - பாபா ஆசாராம், இப்படிப் பலரும் சிறையில் உள்ள நிலை யில், இவர்களுக்கென திகார் போன்று ஒரு தனிச்சிறைச்சாலையே தேவை என் னும் அளவுக்கு நாளும் குற்றங்களை தேசிய அளவில்நடத்தி வருவதோடு, சர்வதேச அளவுக்கும் சென்றுள்ளார்களே!