தீயணைப்பு வீரர்கள் இதுவரை குறைந்தது 50 பேரை மீட்டுள்ளனர்.தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் பிளாஸ்டிக் பொம்மை மற்றும் பயணப் பைகள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். விபத்துக்குள்ளான கட்டடத்தில் பிளாஸ்டிக் மோல்டிங் இயந்திரம் ஒன்று இருந்தது.
தீயணைப்பு படை துணை தலைமை அதிகாரி சுனில் செளதிரி, "600 சதுர அடி குறுகிய இடத்தில் தீ பற்றி உள்ளது. அந்த இடத்தில் பள்ளி பைகள், பாட்டில்கள், அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன," என்கிறார்.
தீயணைப்பு படை தலைமை அதிகரி, "இதுவரை 50 பேரை மீட்டுள்ளோம். பலர் தீ புகையின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்கிறார்.தீ விபத்து இன்று காலை 5.22 மணிக்கு ஏற்பட்டது.
தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளைத் தீயணைப்பு படைவீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.27 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
சம்பவ இடத்தை பார்வையிட்ட டெல்லி தீயணைப்புப் படையின் இயக்குனர் அதுல் கார்க், "இந்த கிடங்கில் அதிகளவில் வைக்கப்பட்டுள்ள தாள்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் தீயில் எரிய தொடங்கியதால், அதிலிருந்து எழுந்த புகையினால் சுவாசிக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த இடம், மிகவும் குறுகலான சாலைக்குள் அமைந்துள்ளதால் முழு வீச்சில் செயல்படுவது கடினமாக உள்ளது" என்று கூறினார்.இதுவரை 43 தொழிலாளர்கள் பலி. மேலும் 50 பேர் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று அதிகாலை தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ரேஹானை போலீசார் கைது செய்தனர்.