ஆந்திர முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் மக்களிடம் தனி கவனம் பெற்று வருகிறார்.
இந்தநிலையில், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழி வழிக் கல்வி கற்பிக்கும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதாவது இந்த ஆங்கில வழிக் கல்வி முறையானது 2020 – 2021ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையும், 2021-2022 ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அரசின் அறிவிப்பிற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்தநிலையில் ஜெகன்மோகன் ரெட்டி நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:-
இன்று உலகத்துடன் போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது. ஆங்கிலம் இல்லாமல் ஒருவர் போட்டியிட முடியாது. எங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க நான் முயற்சி செய்கிறேன். எங்கள் குழந்தைகள் ஆங்கில வழி பள்ளிகளில் படிக்க வேண்டும். அரசு பள்ளிகள் அனைத்தும் ஆங்கில வழிக்கல்வியாக இருக்க வேண்டும்.