நாளை உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க உள்ளார்

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் இன்று காலை 8 மணிக்கு கூட்டம் கூடியது. பாஜவைச் சேர்ந்த இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர், எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவைச் சேர்ந்த 105 எம்எல்ஏக்கள், சிவசேனாவின் 56 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரசின் 54 எம்எல்ஏக்கள், காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த 44 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 288 எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்க உள்ளார்.  நாளை (நவ. 28) மாலை 6.40 மணிக்கு பதவியேற்பு விழா நடப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது. மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெறும் விழாவில், ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.நாளை முதல்வராக உத்தவ் தாக்கரே மட்டும் பொறுப்பேற்பார். அமைச்சர்கள் பின்னர் பொறுப்பேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை முதலமைச்சர்களாக தேசியவாத காங்கிரசின் ஜெயந்த் பாட்டீல், காங்கிரசின் பாலாசாகேப் தொராட் ஆகியோர் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. 
மகாராஷ்டிராவில் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் பதவியும், 15 பேருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர், 13 அமைச்சர்கள் பதவியும், காங்கிரஸ் கட்சிக்கு 13 அமைச்சர்கள், சபாநாயகர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. 
இதனிடையே உத்தவ் தாக்கரே தமக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தும் கடிதத்தை டிச. 3ம் தேதிக்குள் (நேற்றிலிருந்து 7 நாள்) சமர்ப்பிக்க ஆளுநர் அவகாசம் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன