காவி சாமியார் நித்யானந்தா கைதுக்கு பயந்து ஓட்டம் ?

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக கருதப்படும் சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் குஜராத் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தங்களின் இரண்டு மகள்கள் கடத்தப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறி கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதி போலீஸில் புகார் அளித்தனர். எனினும், இந்த புகார் குறித்து காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுதொடர்பாக அவர்கள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.


இதையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் அண்மையில் சோதனை நடத்தினர். இதில், ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல சிறுமிகள் மீட்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை நிர்வகித்து வந்த 2 பெண்களையும் போலீஸார் கைது செய்தனர்.இந்நிலையில், நித்யானந்தா மீது கடத்தல், குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக குஜராத் போலீஸார் தெரிவித்துள்ளனர். எனவே, அவரை கைது செய்வதற்காக மத்திய வெளியுறவுத் துறையுடன் போலீஸார் தேடி வருகின்றனர்.காவி சாமியார் நித்யானந்தா கைதுக்கு பயந்து ஓட்டம்