உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் வரும் 13-ம் தேதி இறுதித் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக உத்தர பிரதேசம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்கைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுக தீர்வு காண 3 பேர் கொண்ட சமரசக் குழுவை அரசியல் சாசன அமர்வு நியமித்தது.
இந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றனர். இந்தக் குழுவின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டது. நாற்பது நாட்கள் நடைபெற்ற விசாரணையில் இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனிடையே, 3 பேர் அடங்கிய சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன்படி சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி நிலத்தை அரசே கையகப்படுத்திக் கொள்ள சன்னி வக்பு வாரியம் சம்மதித்துள்ள தாகக் கூறப்படுகிறது. இதனை இதர முஸ்லிம் அமைப்புகள் மறுத்தன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இன்று முதல் வரும் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை உச்ச நீதிமன்றத்தின் அலுவல் நாட்கள் முழுமையாக நடைபெற உள்ளது. அதன்பின் 9-ம் தேதி சனி, 10-ம் தேதி ஞாயிறு விடுமுறை நாட்களாகும். குருநானக் பிறந்த நாளையொட்டி வரும் 11, 12-ம் தேதியும் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்பின் வரும் 13-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம். ஒருவேளை அன்றைய தினம் தவறினால் 14, 15-ம் தேதிகளில் கண்டிப்பாகத் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அயோத்தி வழக்குத் தீர்ப்பை யொட்டி உத்தர பிரதேசத்தின் அயோத்தி, வாரணாசி, மதுரா நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்திருப்பதால் அந்த நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல அசாதாரண சூழ்நிலை நிலவும் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் சில நாட்களுக்கு முன்பு 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டது