அன்றன்றுள்ள அப்பம்

*அன்றன்றுள்ள அப்பம்*                     
 
*அக்டோபர் 19 சனி 2019*


 *பாவம் நீங்கட்டும்!* 


" *என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்" (சங். 51:2).* 


 *வேதத்திலே 51-ம் சங்கீதம் மிக உருக்கமான பகுதிகளில் ஒன்றாகும். பாவத்தின் விளைவுகளைக் குறித்து தாவீது அநேகக் காரியங்களை உணர்ந்து கதறி அழுது ஜெபிக்கும் ஜெபமே இந்த சங்கீதமாகும்.* 


 *விஞ்ஞானத்தில் பல கண்டுபிடிப்புகளைப் பார்க்கலாம். மின்சார பல்புகளைக் தாமஸ் ஆல்வா எடிசனும், தந்தியை மார்க்கோனி என்பவரும், அணு பிளக்கும் என்பதை ஐன்ஸ்டின் என்பவரும் கண்டு பிடித்தனர். பாவத்தின் விளைவுகள் என்ன என்று கண்டுபிடித்து வேதத்தில் நமக்கு எழுதி வைத்தவர் தாவீது. பாவத்தின் கொடூரங்களில் மிக முக்கியமான கொடூரம், தேவனை விட்டு உங்களை தூரமாக்கி பிரித்து விடுவதுதான்.* 


 *முதலாவது, தாவீது, எந்த பாவமானாலும் அது தேவனுக்கு விரோதமானது என்பதைக் கண்டு பிடித்தார். தாவீது உரியாவுக்கு விரோதமாய், பத்சேபாளுக்கு விரோதமாய், தன் சொந்த சரீரத்திற்கு விரோதமாய் பாவம் செய்தார். இவையெல்லாம் தேவனுக்கு விரோதமானப் பாவமேயாகும். "தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்சேது, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்" (சங். 51:4) என்று தாவீது கதறினார்.* 


 *இரண்டாவது, மனுஷனால் பாவத்தை மூட முடியாது என்பதை தாவீது மூலம் அறியலாம். தாவீது பாவத்தை மூட நினைத்து உரியாவைக் கொன்றார். ராஜாவாக இருப்பதினால் எல்லா மனுஷருடைய வாயையும் அடைத்து விட்டதாக எண்ணினார். ஆனால், தாவீதால் அந்த பாவத்தை மூட முடியவில்லை. தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் வந்து பாவத்தை உணர்த்திக் காண்பித்தார். பாவம் மூடப்பட வேண்டிய ஒன்று. ஆனால் உங்களால் அதை மூட முடியாது. சாத்தான் உங்களிடம் வந்து அதை மூடி வைத்து விடு தப்பித்து விடலாம் என்று தந்திரமாகச் சொல்லுவான். ஆனால் அதில் உண்மையில்லை.* 


 *தேவபிள்ளைகளே, பாவத்தை மூடி வைக்காமல் கர்த்தரிடத்தில் மனம்திறந்து அறிக்கையிடுங்கள். இயேசுவின் இரத்தமே சகல பாவங்களையும் கழுவுகிறது, மன்னிக்கிறது, மூடுகிறது. வேதம் சொல்லுகிறது, "எவனுடைய மீறுதல் மன்னிக்கப் பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்" (சங். 32:1). கர்த்தரிடத்தில் நீங்கள் அறிக்கையிடும்போது, அவர் பாவத்தை மூடி விடுவார், கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமா அதை விலக்கி விடுவார். அவர் அதை எண்ணாமலுமிருப்பார்.* 


 *மூன்றாவது, தாவீது பாவம் சந்தோஷத்தைக் கொண்டு வராது என்பதைக் கண்டார். தாவீது பாவம் செய்தபோது இரட்சண்யத்தின் சந்தோஷமும், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமும் அவரை விட்டு விலகின. ஆகவே, மனம் நொந்து, "உமது இரட்சண்யத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்" (சங். 51:12) என்று கெஞ்சினார். தேவபிள்ளைகளே, நீங்கள் தேவனோடு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமென்றால், பாவம் உங்களை அணுகாதபடி காத்துக்கொள்ளுங்கள்* .


 *நினைவிற்கு:- "நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்" (சங். 51:8).* 



*இன்றைய வேத வாசிப்பு* 


 *காலை - ஏசாயா 56, 57* 
 *மாலை -  2தெசலோனிக்கேயர் . 3.*