சென்னை: மேற்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. இது தற்போது மேலும் வலுப்பெற்று தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மத்திய அரபிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் தோன்றிய வெற்றிடம் காரணமாக அங்கு புயல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரபிக் கடல் மற்றும் தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதம், காற்று, அரபிக் கடல் பகுதிக்கு உறிஞ்சப்படுகிறது. இதனால் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யும் என்று (ரெட் அலர்ட்)வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த இடங்களில் 21 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று கணித்துள்ளனர். இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளபடி நீலகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 183 மி.மீ, புதுவை மாநிலம் காரைக்காலில் 113.4 மி.மீ, சேலத்தில் 97, தர்மபுரியில் 55, ராமநாதபுரம் மாவட்டம் தொன்டியில் 50.8, தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினத்தில் 44.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதுதவிர பல இடங்களில் 10 மி.மீக்கு அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
இதையடுத்து வடகிழக்கு பருவமழை படிப்படியாக மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தமாக மாறி வருகிறது.
இது மெல்ல மெல்ல தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னையை ஒட்டியுள்ள கடல்பகுதியில் கடந்து செல்லும் என்பதால், சென்னையில் இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யும். வடகிழக்கு திசையிலிருந்தும் காற்று வீசும் என்பதால் பகல் பொழுதில் சென்னையில் மழை பெய்யும். இந்த காற்றின் திசை மாறும்பட்சத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதையடுத்து அரபிக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாவதை அடுத்து கேரளாவில் நாளை அதி தீவிர மழை (சூப்பர் ரெயின்) பெய்யும். அதன் காரணமாக ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரியில் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது