ஆழ்துளை கிணறு 80 அடி ஆழத்தில் இருக்கும் குழந்தை
 

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை  மீட்கும் பணி 23மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது.

 

நெய்வேலி நிலக்கரி சுரங்க துணை பொதுமேலாளர் கிருஷ்ணா ராவ் தலைமையிலான மீட்பு குழுவினர் நடுக்காட்டுபட்டிக்கு வருகை தந்து சிறுவனை மீட்பது குறித்து ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினார்கள்.



 



 

குழந்தை சுர்ஜித்தை இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்க முயற்சி எடுக்கப்படுகிறது. இடுக்கி போன்ற கருவியால் மீட்க முடியாவிடில் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள்  முடிவு செய்து உள்ளனர்.

 

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் முதல் முயற்சி தோல்வி அடைந்தது.

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் 10 பேர் கொண்ட பேராசிரியர் குழு அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டதன் பேரில் மீட்பு உபகரணங்களுடன் திருச்சி நடுக்காட்டுப்பட்டிக்கு விரைந்து உள்ளது.

 

இந்த நிலையில் சுர்ஜித்தின் தாய் கலாமேரியை நேரில் சந்தித்து கரூர் எம்.பி. ஜோதிமணி ஆறுதல் கூறினார் பின்னர்  ஜோதிமணி பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

 

கனத்த இதயத்துடன் எல்லோரும் இங்கு நின்று கொண்டிருக்கின்றோம்; மீட்புக்குழுவினர் குழந்தையை மீட்டுத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தையை காப்பாற்றிக் கொடுங்கள், அதுபோதும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர்.