7-வது நாளாக டாக்டர்கள் போராட்டம்

வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து மருத்துவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, மருத்துவர்களாக உருவாக்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், அரசுக்கு நெருக்கடி தருவதற்காகவே சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், போராட்டத்தை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காது என்றும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


மருத்துவர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசின் கோரிக்கையை ஏற்று ஆயிரத்து 550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 50 மருத்துவர்களை மட்டுமே பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு உடனடியாக நிரப்பப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.


அப்போது மருத்துவர்களின் சம்பளம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 30 முதல் 40 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் எம்.பி.பி.எஸ் படித்து அரசு மருத்துவமனையில் சேர்ந்ததுமே ஒரு அரசு மருத்துவருக்கு ரூ.80000 சம்பளமாக வழங்கப்படுகிறது.


அவர் பணியில் சேர்ந்த பிறகு மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் அவர் மேல்படிப்பு படிக்க அனுமதிக்கப்படுகிறார். மேல்படிப்பு படிக்கும் 3 ஆண்டு காலமும் பணிக்காலமாகக் கருதி முழுமையாக ஊதியம் வழங்குகிறோம். மேல்படிப்பு படித்து முடித்து விட்டு மீண்டும் பணிக்கு வரும்போது பணி உயர்வு வழங்கி, அதற்கேற்ற அலவில் ஊதியத்தை உயர்த்தித் தருகிறோம்” என்றார்.எம்பிபிஎஸ் படித்த உடன் பணியில் சேரும் மருத்துவர்களுக்கு ரூ.80,000 சம்பளம் எனில் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பள உயர்வு கேட்கிறார்கள் என்ற கேள்வியும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் கேட்பதாக தெரிவித்தார்.