தமிழகத்தில் அக்டோபர் 31 காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு இலங்கையை ஒட்டி நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது குமரிக்கடலில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.


இது, அடுத்த 24 மணி நேரத்தில் மாலத்தீவு, லட்சத் தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது.




 



இது அக்டோபா் 31-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவடையவுள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் அநேக இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியது:


தென் மேற்கு வங்கக் கடலில் தெற்கு இலங்கையை ஒட்டி நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.


இது வடமேற்கு திசையில் நகா்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மாலத்தீவு, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது. அதற்கடுத்து வரும் 24 மணி நேரத்தில் அதாவது அக்டோபா் 31-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு பெறக் கூடும். இந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் அநேக இடங்களிலும் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.


பலத்த மழை: தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்களில் கடலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.


சென்னையில்...: சென்னை மற்றும் புகரைப் பொருத்தவரை நகரில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்றாா் அவா்.