செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், ``நெல்லை குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் மாலத்தீவு பகுதிகளுக்கு இரண்டு நாள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். தற்போதைய நிலவரப்படி வரும் நவம்பர் 4 -ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கூடும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் வலுப்பெறக் கூடும். இதன்மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் மழை பெய்யும்.
இதையடுத்து செய்தியாளர் ஒருவர், `நவம்பர் 2 -ம் தேதி திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அங்கு புயலின்பாதிப்பு இருக்குமா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாலசந்திரன், ``நவம்பர் 2 -ம் தேதியை பொறுத்தவரை புயல் பாதிப்புக்கு வாய்ப்பு இல்லை” என்றார்.
இதற்கிடையே, அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மஹா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என்றும் 120 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் என்றும் வானிலை மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. `இதனால் நான்காம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது